www.cultureofkural. Blogspot.com
< ! doctype html5>
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)
பொழிப்பு (மு வரதராசன்): சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
மணக்குடவர் உரை: சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம்.
எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.
பரிமேலழகர் உரை: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்.
(அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை: சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்று கூறப்படும் ஐவகைப் புலன்கள் பற்றியும் அறிவான்பால்பட்டது உலகு.
பொருள்கோள் வரிஅமைப்பு:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.
பதவுரை:
சுவை-சுவை, உண்டல்;
ஒளி-பிரகாசம், காணல்;
ஊறு-தொடுதலுணர்ச்சி, மெய்யுறுதல்;
ஓசை-ஒலி, கேட்டல் ;
நாற்றம்-மணம், முகர்தல்;
என்று-என;
ஐந்தின்-ஐந்தனது, ஐந்தைப் பற்றிய;
வகை-கூறுபாடு, தன்மை, விவரம்;
தெரிவான்- ஆராய்ந்து தெளிந்தவன்;
கட்டே-கண்ணதே; உலகு-உலகம்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்வகை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை;
பரிப்பெருமாள்: சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை;
பரிதி: ஐம்புலன்வழியே மனசு போகாமற் காக்கும்;
காலிங்கர்: இவை ஐந்தினது கூறுபாட்டையும்;
பரிமேலழகர்: சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்;
ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவற்றின் கூறுபாட்டை என்று தொல்லாசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சுவை,ஒளி,ஊறு,ஓசை,மணம் என்ற ஐவகைகளை', 'சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும் ஐவகைகளை', 'சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் அவற்றைப்பற்றிய உண்மைகளையும்', 'ஐம்பூதங்களுக்கு மூலமாகிய சுவை,ஒளி,ஊறு,ஓசை,மணம் என்பனவற்றின் தோற்றுவாயினை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
'நாக்கின் சுவை, கண்ணின் காட்சி, உடல் தீண்டும் உணர்ச்சி, காதில் கேட்கும் ஓசை, மூக்கில் முகரும் மணம் என்ற ஐந்து புலன்களின் வகைகளை' என்பது இப்பகுதியின் பொருள்.
தெரிவான் கட்டே உலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாராய்வான் கண்ணதே யுலகம்.
மணக்குடவர் குறிப்புரை: எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம்
அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.
பரிப்பெருமாள்: யாராய்வான் கண்ணதே யுலகம்.
பரிப்பெருமாள்: எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம்
அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று. இது உலகினும் பெரியர் என்றது.
பரிதி: அவர்களிடத்திலேயே பெரியோரிருப்பர் என்றவாறு.
காலிங்கர்: உள்ளபடி ஆராய்ந்து அறிவான் கண்ணதே உலகம் என்றவாறு.
பரிமேலழகர்: ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்.
பரிமேலழகர் குறிப்புரை: அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு
ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும்,
அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம்.
தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும்,
அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் ,
தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும்
ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா
எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும்,
சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்
கண்ண தாயிற்று.
இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.
[பூதங்கள்-மண், நீர், தீ, காற்று, வெளி; ஞானேந்திரியங்கள்-அறிகருவிகள்: காது, உடம்பு, கண், நாக்கு, மூக்கு; கன்மேந்திரியங்கள்-
தொழிற்கருவிகள்: வாய், கால், கை, குதம், குறி; மான் - புத்தி; தன்மாத்திரைகள் - ஒக்கும் பூதங்கள்]
'ஆராய்வான் கண்ணதே யுலகம்/ உள்ளபடி ஆராய்ந்து அறிவான் கண்ணதே உலகம்/ ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்' என்றபடி பழம் ஆசிரியர்கள்
பொருள் உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிந்தவன் வசம் உலகம்', 'ஆராய்வான் எல்லைக்குட்பட்டது உலகம்', 'அறிந்து அவற்றை வசப்படுத்திய பெரியோரைத்தான் உலகத்தில்
அறிவுடையோர் போற்றி வந்திருக்கிறார்கள்', 'அறியவல்லவனது அறிவின்கண் உலகத்தினியல்பு அமைந்துள்ளது. (அவற்றை அறிய வல்லவனே உலகத்தில் உண்மை
இயல்பை உணர்ந்தவனாவான் என்பதாம்.
உலகம் ஐம்பூதத்தின் அமைப்பு ஆதலாலும், ஐம்பூதத்தின் மூலங்களையும் அவற்றின் ஆதிக்காரணத்தினையும் அறிந்தவர் உலக அமைப்பின் உண்மையுணர்ந்தவராவர்.
மற்றையோர்க்கு உலகத்தின் மெய் இயல்பு விளங்காதென்றவாறு.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
ஆராய்ந்து அறிவான் வசம் உலகம் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவ்வைந்தின் வகைகளைத் தெரிவான் வசம் உலகம் என்பது பாடலின் கருத்து. இக்குறட்கருத்து சாங்கிய நெறி கூறுவதை ஆராய்கிறதா?
இயற்கை அமைப்பை உணர்ந்தவராக இருப்பர் நீத்தார்.சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்று கூறப்படும் ஐவகைப் புலன்கள் பற்றியும் அவற்றின் இயக்கங்கள் பற்றியும்
அறிந்திருக்கும் நீத்தாரிடத்தேதான் உலகம் அடங்கியுள்ளது.
( உலகம் அடங்கி உள்ளது என்பதை விட புரிந்து கொள்ள முடிகிறது என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் they only can understand the nature of life)
ஐந்தின்வகை தெரிதல் என்பது சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகையாகவே உலகம் உணரப்படுதலையும் அவைகளே உலகத் துய்ப்புக்குக் காரணம் என்பதை
உணர்வதையும் சொல்வது. ஐந்தின்வகை தெரிந்தவர் ஐம்பொறிகளினால் அறியப்படும் பொருள்களுள் எவற்றைக் கொள்ள வேண்டும் எவற்றைத் தள்ள வேண்டும் என்ற
அறிவுடையராயிருப்பார்.
பூதங்கள் ஐந்தும் கூடியது உலகம் என்பது போல் உடலும் ஐம்பூதத்தால் அமைந்தது; ஐம்பூதங்களுக்கும் உயிர்களுக்கு உள்ள இயைபை அறிந்தவர் நீத்தார்
எனவும் விளக்குவர்; உயிர்கள் ஐந்து வகை உணர்வின் வழித் தம்மைக் காத்துக் கொள்கின்றன.
அவ்வுணர்வுகள் பொருந்தி வருமேயானால் ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன; இல்லையேல்-உணர்வு ஒத்துக் கொள்ளவில்லையானால்- உடலுக்கு ஊறு
விளைவிப்பனவற்றைத் தவிர்க்கின்றன; இந்த உண்மையை நீத்தார் நன்கு அறிந்தவராவர். இவ்விதம் புலன்களின் தன்மைகள் குறித்த ஆழ்ந்த அறிவும் உணர்வும்
பெற்றவர்கள் நீத்தார் என்று உரையாளர்கள் விளக்கினர்.
சுவைத்தல், காண்டல், மெய்உறுதல், செவிகேட்டல், முகர்தல் என்ற ஐந்து புலன்களின் இயல்புகளையும், அவைகளுடைய உணர்ச்சிகளையும் தெரிந்து, இன்னின்ன
பொறிகளை இவ்விதமாக அடக்கி ஆண்டால் இன்னின்ன ஆற்றல் கிடைக்கும் என்பதைக் கடைப்பிடித்து நடந்து தவவலிமை பெற்றவர்கள்தாம் 'நீத்தார்' என்று
சொல்லப்படுபவர். அதாவது நீத்தார் என்பவர்கள் ஐம்புலன்களைப் பற்றிய உண்மைகளை அறிந்தவர் ஆவர். ஐம்புலன்களின் கூறுபாட்டையும் ஆராய்ந்தவர்; இவ்வுலக இயல்பையும் உடல் இயல்பையும் உள்ளவாறு உணர்ந்தவர்.
இவர்கள் கல்வி கேள்விகளால் தோட்கப்பட்ட செவி உடையவர்களாகவும் கண்ணோட்டமுள்ள கண் உடையவர்களாகவும் நாவடக்கம் உடைய நா உடையவர்களாகவும்
நாறும் மணமுள்ளதையே முகரும் மூக்கு உடையவர்களாகவும் மலரினும் மெல்லிது என்ற உணர்வுடன் காமம் துய்த்து அதன் செவ்வி தலைப்பட்டவர்களாகவும் திகழ்வர்.
அவர்கள் தந்நலம் அழித்து, உலகோர் நலம் பேணும் மாந்தநேயம் கொண்டவர்களாகவும் வாழ்ந்து சிறப்புப் பெறுபவர்கள்.
அவன் கண் உலகு நிற்கும் என்கிறது இப்பாடல்.
அறிவுடையோர், நல்லோர், அறிவிலார், கயவர் போன்ற முரண்பட்டோர் கலந்திருக்கும் இவ்வுலகம் எப்படி நிலைக்கிறது என்று ஆராய்கிறார் வள்ளுவர்.
அதன் முடிவாக, அறம் செய்வார், அரசியல் புரிவார், செல்வர் - இவர்கள் கண்ணது உலகம் உள்ளது என்று சொல்லவில்லை;
ஐம்புலன்களின் தன்மைகளை உணர்ந்து, அவற்றின் அடிப்படைகள் மற்றும் பயன்களை உலகத்துக்குத் தருகிற ஐந்தின் வகைதெரிவான் கண் உலகு செல்லும் என்று சொல்கிறார்.
பயன்களை உலகிற்குத் தரும் என்பதால் அந்த ஆய்வறிஞன் அறிவியல் அறிஞன் மட்டுமல்லாமல் உலக நன்மைக்காக எந்த வகையிலாயினும் பாடுபடுவனைக் குறிக்கும்.
புலனடக்கம் தந்நலம் நீக்கத் துணை செய்கிறது. தந்நலம் நீத்தவர்களாலேயே உலகை மேம்பாடு அடையச் செய்யமுடியும்.
உலகோர் முன்னேற்றத்திற்கு நீத்தார் பங்களிப்பு பெரிது. உலகப பெரியார்களெல்லாம் ஐம்புலன்களின் தன்மையை உணர்ந்து நடந்து பெருமை பெற்றவரேயாவர். உலக இயக்கம் புலன் ஒழுக்கம் உடைய நீத்தாரிடத்து உள்ளது என்பது போந்த பொருள்.
அதிகாரம் 63. இடுக்கண் அழியாமை.
அதிகார முன்னுரை:
அஃதாவது, வினையின்கண் முயல்வான், தெய்வத்தானாக, பொருள்இன்மையானாக, மெய்வருத்தத்தானாகத் தனக்கு இடுக்கண் வந்துழி, அதற்கு மனங்கலங்காமை. அதிகார.
முறைமையும் இதனானே விளங்கும்.
குறள் 627
இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல். (07)
இதன்பொருள்
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று = நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து;
கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்= தம்மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.
உரைவிளக்கம்
ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப்பெயர் காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒருசொல்; இதற்கு ஒழுக்கநெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக்கொள்வர் என்பது குறிப்பெச்சம்.
...................
கேள்வி
நாற்கதி... நான்கு வகையான பிறப்பு. தேவர், நரகர், மக்கள், விலங்கு என்று நால்வகை பிறப்பு....... தமிழ் லெக்சிகன்.
ஏகதேச உருவக அணி....கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி , மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது.
சாதிப் பெயர்.... தேவர், நரகர் ஆகிய நான்கு வகையான பிறப்புகளை சாதிகள் என்கிறார்.
' இலக்கம் உடம்பு..' என்று குறட்பா கூறுகிறது. உடம்பு என்பது மனித உடம்பைத்தான் குறிப்பிட முடியும். விலங்குகளும், நரகர்களும்... திருக்குறள் படிக்க முடியாது. திருக்குறளும் அவைகளுக்காக எழுதப் படவில்லை.
இந்த நிலையில் 'உடம்பு' என்ற சொல்லுக்கு பல பொருள்கள் கூறி வலிந்து பொருள் கூறுகிறார் பரிமேலழகர்.
அதற்குப் பின் வரும் அந்தச் சொல் நான்கு பொருளையும் குறிக்கின்றது என்கிறார். அதாவது அந்தச் சொல் ஒரு ஏகதேச உருவகம் என விளக்கமும் கூறி தன் தவறான, திரிபு செய்யப்பட்ட உரையை நியாயப் படுத்துகிறார். 'சப்பைக்கட்டு' என்று பேச்சு வழக்கில் கூறுவது.
இந்த நிலையில் இந்த குறளுக்கு எப்படி பொருள் கொள்வது என்பதை பார்ப்போம்:
உடம்பு என்பது உயிருடன் கூடியது. உயிரும் உடலும் இணைந்த
நிலையில் உள்ள போது அது உடம்பு என்கிறோம்.
உயிர் இல்லாத உடல் பிணம் என்போம் . உடம்பு என்று சொல்ல மாட்டோம்.
அதாவது, உடம்பு என்பது உயிருடன் நாம் வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது.
நம் வாழ்க்கை, இடும்பையைத் தவிர்க்க முடியாத வாழ்க்கை என்பதை உணர்ந்த அறிவுடையோர், அதற்காகக் கலங்க மாட்டார்கள். அதிலிருந்து எப்படி மீள்வது என்று சிந்திப்பார்கள்.
இதற்கு மேலும் விளக்கம் ஊழ் என்ற அதிகாரத்தில் உள்ளது.
Comments